Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

புலங்களும் சாதனைகளும்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
அறிமுகம்
 நாம் வாழும் இயல் உலகை (real world) பண்பு அடிப்படையில் (qualitatively) வேறுபட்ட பின்வரும் ஏழு களங்களாகப் (spheres) பிரிக்கலாம்.
















01.விண்வெளி அல்லது அண்ட வெளி (astrosphere)
 
02.வளிமண்டலம் (atmosphere)    
   
03.பாறைக்கோளம் (lithosphere)    
04.நீர்மக்கோளம் (hydrosphere )    
05.உயிர்க்கோளம் (biosphere)    
06.பண்பாட்டுவெளி அல்லது சமூகம் (Noosphere or Society)    

07.உளவெளி (psychosphere)     

  இந்தக் களங்களில் எதுவும் தனித்து நிலவுவதில்லை. இவை அனைத்துமே ஒன்றோடொன்று ஊடுருவியவை மட்டுமின்றி, ஊடாட்டம் புரிபவையும் கூட. ஒரு களத்தின் எந்தவொரு நிகழ்வும் பிற களங்களின் மீது தாக்கம் விளைவிக்கிறது.


ஒவ்வொரு களத்துக்கும் அதற்கே உரிய தரவுத் தளமும் (data base) நிகழ்வுகளும் (phenomena) உண்டு. ஒரு களத்தின் தரவுத் தளம் வரலாற்றியலாக வளர்ந்து வரும் தகவல் அமைப்பாகும். இந்த அமைப்பு தொடர்ந்த புறநிலை, அகநிலை (6) நோக்கீடுகள் வழியாகத் தொகுக்கப் படுகிறது.

புறநிலை நோக்கீடுகள் (observations) அல்லது கவனிப்புகள் ஐம்புலன்கள் வழியாகவும் கருவிகளை கொண்டும் தொகுக்கப் படுகின்றன. கருவிகள் புலன் திறமைகளை விரிவுபடுத்தும் புறநிலை அமைப்புகளாகும்.

அக நோக்கீடுகள் அல்லது காட்சிப் படிமங்கள் புலன், கருவி வழிப் பெறப்படும் புறநிலைத் தகவல்களைச் சிந்தனை செய்முறைகளின் மூலம் (by thought experiments) சரிபார்க்கப்பட்ட அல்லது மதிப்பிடப்பட்ட நுண்காட்சித் தெளிவுகளாகும். இவை அடிகோள்கள் (axioms) தேற்றங்கள் (theorems) நெறிமுறைகள் (principles) துணை அல்லது கிளைத் தேற்றங்கள் (lemmas) இயல் விதிகள் (laws) தனி, சிறப்பு, பொதுக்கோட்பாடுகள் (particular, special and general theories) ஆக அமைகின்றன. இவை அனைத்தும் குறிப்பிட்ட கள நிகழ்வுகளை உருவகிக்கப் பயன்படும் அறிதல் கட்டமைப்புக் கூறுபாடுகளாக அமைகின்றன. இத்தகைய குறிப்பிட்ட களஞ்சார்ந்த தரவுத்தளத்தை உருவாக்கவும் களத்துக்கே உரிய தனித்த நிகழ்வுகளை உருவகிக்கவும் அறிதல் முறைகளாக (cognitive methods)  பகுத்தாய்தல் முறையும் (Analysis)  தொகுத்தறிதல் முறையும் (synthesis) பயன்படுகின்றன.

மனிதன் குறிப்பிட்ட களத்தையும் அதன் நிகழ்வுகளையும் புரிந்து கொள்ளவும் விளக்கவும் அடிகோள் முதல் பொதுக் கோட்பாடு வறையிலான கோட்பாட்டுக் கட்டமைப்புக் கூறுகளை உருவாக்குகிறான். இத்தகைய கோட்பாட்டு நிலை வழிகாட்டுதல்கள் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் பொருளாக்கக் கருவிகளின் வளர்ச்சிக்கும் (development of  production tools) வித்திடுகின்றான்.

ஒவ்வொரு பொருட் களத்துக்கும் கட்டமைப்பும், வகைமை இயக்கமும் களத்துக்கான பொதுப் பொருண்ம அலகும் (unit  entiy  of  matter) உண்டு.  இந்த அலகு குறிப்பிட்ட களப் பண்புகளையும் நிகழ்வுகளையும் வரையறுக்கும் அலகாகும். இதே போல குறிப்பிட்ட கள நிகழ்வுகளைப் பரந்த நிலையில் வரன்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் அடிப்படை நிகழ்வும் விசையும் உண்டு. களப் பொருண்ம அலகினைச் சார்ந்த அக்களத்தை அறிய முயலும் பல்வேறு அறிவியல் புலங்கள் (fields  of  science) உருவாகின்றன. எனவே இயல் உலகின் (real  world)  ஒவ்வொரு களத்தையும் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவியல் புலங்கள் ஆய்வு செய்கின்றன. இந்த அறிவியல் புலங்களின் வளர்ச்சிக்கேற்ப மனித குலம் குறிப்பிட்ட களத்தில் நிகழ்த்தும் ஆய்வுச் செயல்பாடும் அதன் வழி ஈட்டும் வெற்றிகளும் அமைகின்றன. முதலில் விண்வெளிக் களத்தை இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளிக்களம்

*விண்களமும் களவிரிவெல்லையும

 விண்வெளியின் ஒட்டுமொத்தம் புடவி (universe) எனப்படுகிறது. புடவியின் அடுத்த உள்ளமைப்பு பெரும் பால்வெளி (metagalaxy) அல்லது பேரண்டம் (macrocosmos) அல்லது பெருவிண்மீன்திரள் (super  cluster) எனப் படுகிறது. பெரும் பால்வெளியின் அடுத்த உள்ளமைப்பு கள விண்மீன்திரள் (local  cluster)  எனப்படுகிறது. இந்தக் கள விண்மீன் திரளின் கண் பல பால்வெளி (galaxy) அல்லது அண்டம் (cosmos) அல்லது விண்மீன் திரள்கள் அமைகின்றன. ஒவ்வொரு தனித்த பால்வெளியிலும் கோடிக்கணக்கான – ஏறத்தாழ பத்துக் கோடி விண்மீன்கள் உள்ளன. புடவியில் இது போல பத்துக் கோடிப் பால்வெளிகள் அல்லது அண்டங்கள் உள்ளன. நமது சூரியக் குடும்பம் ஒரு விண்மீன் குடும்பமே.

சூரியக் குடும்பத்தில் கோள்கள், துணக் கோள்கள் எனப்படும் நிலாக்கள் சிறு கோள்கள், விண்கற்கள், புகைக்கொடி எனப்படும் வால் விண்மீன் குடும்பங்களுக்கிடையிலும் பால்வெளிகளுக்கிடையிலும் உடுக்கணவெளியில் புடவி தோன்றிய போதுநிலவிய நுண்ணலைக் கதிர் வீச்சுப் பின்னணி நிலவுகிறது.

*களஞ்சார்ந்த அறிவியல் புலங்கள்
விண்வெளி ஆய்வின் முதன்மைப்புலம் வானியலே. எனினும் வானியல் ஒரு சார்புப்புலம் ஆகும். இது வடிவியல், கணிதவியல், இயற்பியல், வேதியியல், வானியற்பியல், விண் (மீன்) வேதியியல் ஆகிய அடிப்படை அறிவியற் புலங்களைச் சார்ந்த அறிவின் தொகுப்பாகும்.

 *விண்வெளியை விளக்கும் கோட்பாடுகள்
விண்வெளியைப் புரிந்து கொள்ளவும் விளக்கவும் பின்வரும் கோட்பாடுகள் எழுந்துள்ளன.
01.புடவித் தோற்றக் கோட்பாடு
02.பொருண்மைத் தோற்றக் கோட்பாடு
03.பால்வெளித் தோற்றக் கோட்பாடு
04.தனிமங்கள் தோற்றக் கோட்பாடு
05.விண்மீன் தோற்றக் கோட்பாடு
06.கோள் தோற்றக் கோட்பாடு
07.நிலாத் (துணைக் கோள்) தோற்றக் கோட்பாடு
08.சிறு கோள், விண் கல், வால் விண்மீன் உருவாக்கம் குறித்த   கோட்பாடு.

மேற்கூறிய அனைத்து விண்வெளி மட்டக் கட்டமைப்பும் இயக்கமும் பற்றிய புரிதலும் அதற்கான கோட்பாட்டுக் கட்டமைப்புக் கூறுகளும் உருவாக்கப் பட்டுள்ளன.

*விண்வெளிக்கள விசைகள்
 விண்வெளிக் கள மடங்களின் ஆளும் விசைகளாக ஈர்ப்பு விசை (gravity)   மெல்விசை (weak  force) வல்விசை (strong  force) மின்காந்த விசைகள் (electro  magnetic  forces  ) செயல்படுகின்றன.

*விண்வெளி உட்களங்களும் அடிப்படை பொருண்ம அலகுகளும்
விண்வெளி பரந்து விரிந்த பெருங்களம் என்பதால், படிமலர்ச்சி சார்ந்த அதன் பல உட்களங்களைப் பொறுத்து பல மட்டப் பொருண்ம அலகுகள் (units  of  matter) அமைகின்றன.

புடவி தோன்றிய பெருவெடிப்பு நிலையில் (big  bang  stage) கதிர்வீச்சின் அலகான ஒளியன் (photon) அதன் பொருண்ம அலகாக அமைகிறது.

பொருண்மத் தோற்ற நிலையில் பொருளின் முதல் தோற்ற அலகான பொருளன் (quark) பொருண்ம அலகாகிறது. பிறகு மின்னனும் (electron) நேர்மியும் (proton)  முதனிலைப் பொருண்ம அலகுகளாகின்றன.

 அடர்த்தி அலைவுகளால் (density  oscillations)  ஏற்படும் பால்வெளித் தோற்ற நிலையில் விண்மீன் தோற்றஞ்சார்ந்த நான்கு தலைமுறைகளில் ஒவ்வொரு தலை முறைக்கும் ஒரு வகைப் பொருண்மை அலகு நிலவுகிறது. முதல் தலைமுறையில் அணுக்கருவும் அதை குறிப்பிட்ட வட்டணைக் கூடுகளில் (orbital  shells) சுற்றி வரும் மின்னன்களும் இரண்டாம் தலைமுறையில் நீரினி வளிமமான நீரகமும், அதன் இரட்டுறுப்பான எல்லியமும் சார் பொருள் விகுதி; சூரிய எடையில் பெரும் பகுதி எல்லியத்தாலானது; அடிப்படை பொருண்மை அலகுகளாக அமைகின்றன. மூன்றாம் தலைமுறையில் தளர்தனிமங்களும் (குறைந்த அணுவெடைத் தனிமங்களும்) நான்காம் தலைமுறையில் அடர் தனிமங்களும் (உயரெடைத் தனிமங்கள்) பொருண்ம அலகுகளாக அமைகின்றன.

சுருங்க, முதல் தலைமுறையில் அணுவகத்துகள்களும் (subatomic  particles) இரண்டு முதல் நான்காம் தலைமுறைகளில் தனிமங்களும் அடிப்படை பொருண்ம அலகுகளாக அமைதலைக் கண்ணுறலாம்.

கோள்களின் தோற்ற நிலையில் மூலக் கூறுகளும் சேர்மங்களும் (compounds)  வளர்நிலையில் சேர்மப் படிமங்களும் (கனிமங்களும்) அடிப்படை பொருண்மக் கூறுகளாக அமைகின்றன.

விண்வெளி உறழ்பொருள் நிலைப் பொருண்மம் (inert  stage  matter) மட்டுமே ஓங்கலாக ஆட்சி செலுத்துவதால் அடிப்படையில் இதுவோர் உறழ்பொருட் களமாகும்.

*விண்வெளிக் கட்டமைப்பும் வகைமை இயக்கமும் விசைகளும்

விண்வெளிக் களத்தைப் பொறுத்தமட்டில் கட்டமைப்பும் வகைமை இயக்கமும் ஆளும் விசைகளும் படிமலர்ச்சி சார்ந்த அதன் உட்களங்களைச் சார்ந்தமைகின்றன. பெரு வெடிப்பிலும் அதையடுத்த மூன்று மணித் துளிகளிலும் கதிர்வீச்சு ஆற்றலும் ஈர்ப்பு விசையும் புடவியின் சீரான விரிதல் நிகழ்வை ஆண்டன. வெப்பக் கதிர்வீச்சு புடவியைச் சீராக விரிவுறச் செய்கிறது. ஈர்ப்பு அதற்கு எதிராகச் செயல்படுகிறது. என்வே பெருவெடிப்பெடுத்ததும் முதலில் செயல்படும் எதிர்விசை ஈர்ப்பு விசையே இதை ஏந்தும் பொருண்ம ஊடகமான ஈர்ப்பன் என்ற பொருண்ம அலகு அமைவதாகக் கருதப் படுகிறது.

ஆனால், இதுவரை ஈர்ப்பன் என்ற பொருண்ம அலகு கண்டுபிடிக்கப்படவில்லை. அதே போல் அணுவகத்துகளின் அடிப்படை அலகான பொருளனும் இது வரை கண்டுபிடிக்கப் படவில்லை. புடவி சீராக விரிவடைதலே இக்கட்டத்தின் அடிப்படை வகைமை இயக்கமாகும். இந்நிலையில் புடவியின் அமைப்பும் கட்டமைப்பும் தனித்தனியான மின்மி, நொதுமிக் குழம்பாலான சீரான ஊடகத்தோடு அமைந்தன.

கோள்களில் பல்வேறு வானியல் நிகழ்வுகளால் சிதறிய பொருள் திரள்கள் துணைக்கோள்கள் எனும் நிலாக்களாகி, தாய்க் கோள்களைச் சுற்றி வரலாயின. இதைவிடச் சிறிய கோள்கள் குறுங்களாகவும், அதை விடவும் சிறியவை விண்கற்களாகவும் தாய்க்கோள் வட்டணையிலும் தாய் விண்மீன் வட்டணையிலும் சுற்றி வரலாயின.

இவ்வாறு துணைக்கோள்கள் கோள்களைச் சுற்றி வர, கோள்கள் தாய் விண்மீனைச் சுற்றிவர, விண்மீன்கள் வட்டணைகளில் சுற்றிவர அண்டங்கள் பேரண்ட மைய வட்டணைகளிலும் பேரண்டங்கள் புடவி மைய வட்டணைகளிலும் சுற்றி வருகின்றன.

*விண்வெளி ஆராய்ச்சியின் அகக் கட்டமைப்பு வளர்ச்சி

விண்வெளி ஆராய்ச்சி தற்கால அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மிக வேகமாக முன்னேறி வருகிறது. கலீலியோவின் தொலைநோக்கி முதல் இன்றைய தொலைநோக்கியான அப்புள் தொலைநோக்கி வரை, தொழில் நுட்பப் பெருவளர்ச்சி பெற்று, வானியல் ஆராய்ச்சியில் முனைப்பான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. இவற்றோடு நில்லாமல் புறவெளிக் கோள்களைக் கண்டறிய புதிய கெப்ளர் தொலைநோக்கியும் செயற்பாட்டுக்கு வந்துள்ளது. நமது புவி பால்வழி எனப்படும் வானகங்கைப் பால்வெளியிலும் நமது பால்வழி கன்னி விண்மீன் பெருந்திரளிலும் அமைந்துள்ளது.

                                   -உலோ. செந்தமிழ்க்கோதை-
   
நன்றி:   சமூக விஞ்ஞானம் -  காலாண்டு ஆய்விதழ், டிசம்பர் – 2010





நன்றி புதிய பெண்ணியம் சமூக அறிவியல் தமிழ் பண்பாட்டு இனைய இதழ் 


பதிவின் தொடுப்பு 


தொடர்புள்ள இடுக்கைகள் 
நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த Strawberry
புலங்களும் சாதனைகளும்
ஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்!
தன்மை மாராமல் கிடைக்கும் கிரீன்டி உடலுக்குத் தரும் பல நன்மைகள்
புலங்களும் சாதனைகளும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets