அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
விஸ்வரூபம் திரைப்படம் குறித்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு
கமல் ஹாஸன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் உலகளாவிய முஸ்லிம் மக்களிடம் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்தமையை அடுத்து, இந்தியாவின் தமிழகம், பெங்களுர், ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், குவைட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கடார் உள்ளிட்ட பல நாடுகளிலும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விஸ்வரூபத்தை இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்ததனை அடுத்து முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாய் தற்காலிக தடையுத்தரவினை இலங்கை அரசு அறிவித்ததோடு, முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பார்வைக்குப் பின் வெளியீடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
இதற்கமைவாக கடந்த 29-01-2013 அன்று இரவு 7.00 மணி முதல் 9.30 மணி வரை இத்திரைப்படம் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய புத்தி ஜீவிகள், இயக்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பார்வைக்கு விடப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜமாத்தின் துணை தலைவர் மவ்லவி பர்சான் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் மவ்லவி ரஸ்மின் ஆகியோர் திரைப்படத்தை பார்வையிட்டார்கள்.
இத்திரைப்படத்தினை பார்வையிடுவதற்கு முன்னால் எங்களிடம் இத்திரைப்படம் குறித்து என்ன மனப்பதிவு காணப்பட்டதோ, அந்த மனப்பதிவு பார்வையிட்டதன் பின்பு முன்பிருந்ததை விட எதிர்ப்பு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்துள்ளதே தவிர கிஞ்சிற்றும் தணிவடையச் செய்யவில்லை என்பதை அழுத்தமாய் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆங்காங்கே அவ்வப்போது முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் சீண்டி சில திரைப்படங்கள் வெளியிடப்பட்ட போதிலும் மொத்தமாய் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை சமுதாய மன்றில் விதைக்கும் திரைப்படமாகவே விஸ்வரூபத்தை அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி, ஜிஹாத் மற்றும் இஸ்லாம் குறித்த தவறான புரிதலை மாற்றுமத அன்பர்கள் அகங்களில் தோற்றுவிக்க முனைந்திருப்பதோடு, முஸ்லிம் விரோத எதிர் மறை உணர்வை சமூக தளத்தில் விதைப்பதாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.
ஏலவே நீருபூத்த நெருப்பாய் இனமுறுகள்கள் அதிகரித்து வரும் தருணத்தில் முஸ்லிம்கள் குறித்த மூன்றாம் தரப் பார்வையை பேரின சமுதாயத்தவர் மத்தியில் இத்திரைப்படம் விதைக்குமாயின் அதன் எதிர் வினை பாரிய அதிர்வுகளாய் முடியும் என்பதை கருத்திற் கொண்டும், இந்நாட்டின் சட்ட ஒழுங்கும், சமுதாய நல்லிணக்கமும் ஒரு கூத்தாடியின் திரைப்படக் காட்சிகளினால் சீர்குலைந்து விடக் கூடாது என்பதனையும் சிந்தையிற் கொண்டு விஸ்வரூபம் திரைப்படம் முற்று முழுதாக இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அத்தோடு, நாம் இவ்விறுதி முடிவை எட்டுவதற்கு ஏதுவாக அமைந்த கராணங்களையும் உங்கள் கவனத்திற்கு அறிக்கையாய் சமர்ப்பிக்கின்றோம்.
விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்?