Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

விஸ்வரூபம் திரைப்படம் குறித்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

விஸ்வரூபம் திரைப்படம் குறித்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு

கமல் ஹாஸன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் உலகளாவிய முஸ்லிம் மக்களிடம் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்தமையை அடுத்து, இந்தியாவின் தமிழகம், பெங்களுர், ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், குவைட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கடார் உள்ளிட்ட பல நாடுகளிலும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விஸ்வரூபத்தை இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்ததனை அடுத்து முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாய் தற்காலிக தடையுத்தரவினை இலங்கை அரசு அறிவித்ததோடு, முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பார்வைக்குப் பின் வெளியீடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இதற்கமைவாக கடந்த 29-01-2013 அன்று இரவு 7.00 மணி முதல் 9.30 மணி வரை இத்திரைப்படம் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய புத்தி ஜீவிகள், இயக்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பார்வைக்கு விடப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜமாத்தின் துணை தலைவர் மவ்லவி பர்சான் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் மவ்லவி ரஸ்மின் ஆகியோர் திரைப்படத்தை பார்வையிட்டார்கள்.

இத்திரைப்படத்தினை பார்வையிடுவதற்கு முன்னால் எங்களிடம் இத்திரைப்படம் குறித்து என்ன மனப்பதிவு காணப்பட்டதோ, அந்த மனப்பதிவு பார்வையிட்டதன் பின்பு முன்பிருந்ததை விட எதிர்ப்பு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்துள்ளதே தவிர கிஞ்சிற்றும் தணிவடையச் செய்யவில்லை என்பதை அழுத்தமாய் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆங்காங்கே அவ்வப்போது முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் சீண்டி சில திரைப்படங்கள் வெளியிடப்பட்ட போதிலும் மொத்தமாய் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை சமுதாய மன்றில் விதைக்கும் திரைப்படமாகவே விஸ்வரூபத்தை அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி, ஜிஹாத் மற்றும் இஸ்லாம் குறித்த தவறான புரிதலை மாற்றுமத அன்பர்கள் அகங்களில் தோற்றுவிக்க முனைந்திருப்பதோடு, முஸ்லிம் விரோத எதிர் மறை உணர்வை சமூக தளத்தில் விதைப்பதாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

ஏலவே நீருபூத்த நெருப்பாய் இனமுறுகள்கள் அதிகரித்து வரும் தருணத்தில் முஸ்லிம்கள் குறித்த மூன்றாம் தரப் பார்வையை பேரின சமுதாயத்தவர் மத்தியில் இத்திரைப்படம் விதைக்குமாயின் அதன் எதிர் வினை பாரிய அதிர்வுகளாய் முடியும் என்பதை கருத்திற் கொண்டும், இந்நாட்டின் சட்ட ஒழுங்கும், சமுதாய நல்லிணக்கமும் ஒரு கூத்தாடியின் திரைப்படக் காட்சிகளினால் சீர்குலைந்து விடக் கூடாது என்பதனையும் சிந்தையிற் கொண்டு விஸ்வரூபம் திரைப்படம் முற்று முழுதாக இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அத்தோடு, நாம் இவ்விறுதி முடிவை எட்டுவதற்கு ஏதுவாக அமைந்த கராணங்களையும் உங்கள் கவனத்திற்கு அறிக்கையாய் சமர்ப்பிக்கின்றோம்.

விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்?



1.             இத்திரைப்படத்தின் பெயர் பார்வைக்கு வரும் போது தமிழ் மரபுக்கு மாற்றமாக அரபு எழுத்தணி மரபை பிரதிபலிக்கும் விதமாய் இடமிருந்து வலமாக எழுதப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாரம்பமே இத்திரைப்படம் இஸ்லாத்தைக் கருப்பொருளாகக் கொண்டே ஓடப்போகிறது என்பதனை சொல்லாமல் சொல்கிறது.

2.             ஜிஹாத் என்ற அரபுச் சொல் வெறுமனே போராட்டத்திற்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் பிரயோகம் கிடையாது.உலகத்தில் தாண்டவமாடும் அநீதிகள், அக்கிரமங்கள், தீமைகள் என்பவற்றை வேரடி மண்ணோடு களை பிடுங்கி, நன்மைகளை வாழவைப்பதற்காக மேற்கொள்ளப்படும் அத்துனை முயற்சிகளும் ‘ஜிஹாத்’ என்ற சொல்லுக்குள் அடக்கும். திருக்குர்ஆனும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளும் இதனையே எமக்கு உணர்த்துகின்றன. இதற்குள் அநீதிக்கெதிராய் ஆட்சியில் இருக்கும் ஓர் அரசு தொடுக்கும் ஆயுதச் சண்டையும் உள்ளடங்கும். ஆனால், அர்த்தப் புஷ்டிமிகுந்த ஜிஹாத் என்ற சொல்லை கொச்சைப்படுத்தும் விதமாயும், ஆட்சி அதிகாரமற்ற சிறு குழுக்கள் செய்யும் கிளர்ச்சி நடவடிக்கைகளை ஜிஹாத் என்ற சொல்கொண்டு அடையாளப்படுத்துவதன் மூலம் இஸ்லாம் தான் இத்தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டுகிறது என்ற போலித் தோற்றத்தை விதைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை படம் முழுவதும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, ‘நாம் அல்லாஹ்வுக்காகப் போராடுபவர்கள்’, ‘நம்மைப் போன்ற முஜாஹிதீன்கள் கண்ணீர் சிந்தக் கூடாது.இரத்தம் தான் சிந்த வேண்டும்.’ என்ற வாசக அமைப்புகளும், தாக்குதல் நடாத்தும் செய்தி கிடைத்தவுடன் ‘இன்னஹ_ வக்துன் லித்தஹாபி இலல் ஜன்னஹ் – இதோ சுவர்க்கம் செல்வதற்கான நேரம் கணிந்து விட்டது’ என்பன போன்ற அரபுப் பிரயோகங்களும் ஜிஹாத் குறித்த தப்பான புரிதலை விதைக்கும் விதமாய் அமைந்துள்ளமை கண்டிக்கத்தக்க அம்சமாகும்.

3.             முஸ்லிம்கள் தங்கள் சிறார்களை வளர்க்கும் போது கூட பிஞ்சு உள்ளங்களில் தீவிரவாத உணர்வை ஊட்டியே வளர்க்கின்றனர் என்ற கருத்து அழுத்தமாய் சொல்லப்படுகிறது.ஆங்கிலத்தையும் மருத்துவத்தையும் கற்பதை தடை செய்து விட்டு, ஆயுதக்கலையை கற்பதற்கு குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற காட்சி முஸ்லிம்கள் குறித்த தப்பபிப்ராயத்தை அதிகரிக்கவே உதவும்.அதுமட்டு மன்றி கண்களை கட்டி ஆயுதங்கள் குறித்து விசாரித்தாலும் தொடுகை மூலமே இது இன்ன ஆயுதம் தான் என்று சொல்லும் அளவுக்கு சிறார்கள் முஸ்லிம்களால் பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்ற காட்சியும், விளையாட்டின் போது கூட விரல்களால் சுட்டு விளையாடுவதே வழமை எனும் காட்சிகள் மூலமும் கமல்ஹாஸன் சொல்ல வரும் செய்தி தான் என்ன?

4.             முஸ்லிம்கள் தங்கள் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு முன்னால் மாத்திரம் தலை சாய்த்து ‘நாங்கள் உனக்கு மட்டுமே அடிமை. எம்மைப் போன்ற எந்தப்படைப்புக்கு முன்பும் தலை சாய்த்து சுயமரியாதை இழக்க மாட்டோம்’ என்ற உணர்வை உணர்வுபூர்வமாய் வெளிப்படுத்தும் இடமே பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடும் சந்தர்ப்பம். மன அமைதியையும், சாந்தத்தையும் பயிற்சியாய் தரும் தொழுகை இத்திரைப்படத்தில் இழிவு செய்யப்பட்டுள்ளது. ஓவ்வொரு தீவிர வாத தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்பாகவும் தொழுதுவிட்டுத் தான் அத்தாக்குதல்கள் நடாத்தப்படுவது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தொழுகை என்ற முஸ்லிம்களின் கடமை தீவிரவாத தாக்குதல்களை ஊக்குவிக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது.அது மட்டுமன்றி, பள்ளிவாசல்கள் எனும் அபய பூமிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடாத்துபவர்களை பயிற்றுவிக்கும் பங்கர்களாக தொழிற்படுவது போன்றும் காட்சியமைப்பு நகர்த்தப்படுகிறது. இது போன்று சுமார் 6 இடங்களில் இது போன்ற தொழுகை காட்சிக்கும்; தீவிரவாத தாக்குதல்களுக்கும் முடிச்சுப் போடப்படுவதை காணலாம்.

5.             முஸ்லிம்களின் ஆடை கலாச்சாரமாய் இன்று அறிமுகமாகியிருக்கும் வெள்ளை நிற நீண்ட அங்கி(ஜூப்பா), தொப்பி, தாடி மற்றும் மீஸான் பலகை, திருக்குர்ஆன் பிரதிகள் போன்றன காட்சிப்படுத்தப்படுவதோடு, இவ்வாறான தோற்றத்தில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தும் விதைக்கப்படுகிறது. இதனால் சாதாரண முஸ்லிமை காணும் போதும் இவனும் தீவிரவாதியாய் இருப்பானோ என்ற எண்ணம் பிறருக்கு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

6.             இஸ்லாமியப் பெண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒழுக்கவாழ்வுடன் பின்னிப்பிணைந்த ஆடை முறையே ஹிஜாப் என அழைக்கப்படும். ஒழுக்கத்தை வளர்க்க உதவும் ஹிஜாபை மலினப்படுத்தும் விதமாய் தீவிரவாதிகள் பெண்களின் ஹிஜாப் ஆடையில் முகம் மறைத்துச் சென்று தற்கொலை தாக்குதல் நடத்தும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹிஜாப் என்பது தீவிரவாதத்திற்கு துணை போகும் ஆடை என்ற கருத்து திணிக்கப்படுகிறது.

7.             இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் கர்ண கொடூரமானவை என்பது போல் சித்தரிக்கும் காட்சிகளும் உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவுக்கு ஒற்றனாய் திகழ்ந்த ஒருவன் பிடிப்பட்டவுடன் அவனை தூக்கில் போடும் காட்சியை குறிப்பிட முடியும். இதில் அவன் தூக்கில் தொங்கும் போது பின்னணியில் அதான் (பாங்கு சத்தம்) ஒலிப்பது போன்றும், ‘இது இவர்களின் கரங்கள் செய்த வினையே’ என்ற அர்த்தத்தை தரும் குர்ஆன் வசனமும் ஒலிபரப்பப்படுகிறது. அத்தோடு, இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாய் அல்லாஹ_ அக்பர் என்ற முழக்கத்தை அனைவரும் சொல்வது போன்றும் படம் ஓட்டப்படுகிறது.மேலும், கைதிகளை பிடித்து வந்து கதறக்கதற கழுத்தை வெட்டும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து கொண்டு, குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டு, லா இலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்தை தாங்கிய பெனருக்கு முன்னிருந்த வண்ணம் இது நடைபெறுகிறது.இது இஸ்லாத்தை இழிவு படுத்தும் பாதகச் செயலாகும். மேலும், தப்பு செய்தவர்களை மல்லாக்காக படுக்க வைத்து பின் புஷ்டியில் சவுக்கடி கொடுக்கும் காட்சியும் வருகிறது. இவை இஸ்லாமிய ஷரீஆ சட்டம் குறித்த குறைமதியாளன் கமல்ஹாசன் பொது மக்களுக்கு இஸ்லாத்தை இழிவு படுத்துவதற்காக காண்பிக்கும் காட்சிகளாகும்.

8.             முஸ்லிம் நாடுகளும், அரபு பேசும் தேசங்களும் பயங்கரவாதத்தை உலகெங்கும் விதைக்கும் நாடுகள் என்ற கருத்து பரவலாக சொல்லப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் போலிஸ் உஸாமாவை சந்தித்து தீவிரவாதத்திற்கு துணை போவது போன்றும், அல்ஜீரியா, நைஜீரியா, யெமன், காஷ்மீர், ஆப்கான் போன்ற தேசங்கள் முற்று முழுதாக பயங்கரவாதத்தை வளர்ப்பதற்காக பல நாடுகளுக்கு பண உதவி செய்வது போன்றும் காட்சிகள் வருகின்றன. இதன் மூலம் முஸ்லிம்கள் சிறுபான்மையாய் வாழும் நாடுகளுக்கு இது போன்ற ஜிஹாதிய பண உதவிகள் வழங்கப்படுகின்றன என்ற தப்பான பதிவு பரப்பப்படுகிறது.

9.             முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அது குறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் ‘தமிழ் ஜிகாதி என்றால் விலையாக 5 லட்சம் அல்ல, 10 லட்சமே கொடுக்கலாம்” என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

10.           அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விட்டு வைக்கவில்லை. அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.

11.           பொதுவாக முஸ்லிம்கள் யாரை சந்தித்தாலும் அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவார்கள். இந்த வார்த்தையை அனைத்துத் தீவிரவாதிகளும் ஸலாமலைக்கும் என்று பயன்படுத்தும் காட்சி படத்தின் அனைத்துப் பகுதியிலும் இடம் பெற்றுள்ளது.

12.           அதே போல் ஒருவர் தொலை பேசியில் பேசினால் ஹலோ என்று சொல்வார். முஸ்லிம்களாக இருந்தால் ஹலொ அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் விஸ்வரூபம் திரைப்படத்தில் தொலை பேசியில் பேச ஆரம்பிக்கும் போதும் பேசி முடித்த பின்னரும் அல்லாஹ{ அக்பர் என்று கூறி முடிக்கின்றார்கள்.

13.           முஸ்லிம்கள் என்றால் பெண்களை ஏமாற்றுபவர்களாகவும் சொந்த மனைவியை தீவிரவாதத்தை நிகழ்த்துவதற்காக கூட்டிக் கொடுப்பவர்களாகவும் காட்டப்படுகின்றார்கள்.

14.           எந்தவொரு காரியத்தை செய்யும் போதும் சத்தியம் செய்வதற்காக வல்லாஹி – அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்று அரபியில் சத்தியம் செய்யும் காட்சி.

15.           திரைப்படத்தின் வில்லனாக வருபவன் பெயர் முல்லா உமர் – இவன் இரண்டு வருடங்கள் தமிழகத்தின் கோவை மற்றும் மதுரையில் தங்கியதாகவும் தமிழ் ஜிஹாதி தான் தனக்குத் தேவையென்றும் கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

16.           ஆப்கானிஸ்தான், ஈராக், போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள், சிறவர்கள் அனைவரையும் கொலை செய்த அமெரிக்க இரானுவத்தை பற்றி முல்லா உமர் என்ற தீவிரவாதிகளின் தலைவர் – அமெரிக்க இரானுவம் பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்யமாட்டார்கள் அதனால் பயப்படத் தேவையில்லை. என்று குறிப்பிட்டு அமெரிக்க இரானுவம் மனித நேயமுள்ள இரானுவம் என்ற காட்சி இடம் பெறுகின்றது.

17.           தான் கொல்லப்படப் போகின்றேன் என்று அறிந்த ஹீரோ கமல் அதற்கு முன் தொழுவதற்கு அனுமதி கேட்டு தொழும் போது ரப்பனா ஆதினா பீ துன்யா – என்று முஸ்லிம்கள் சொல்லும் துஆவை ஓதும் காட்சி இடம் பெறுகின்றது.

18.           அனைத்துக் காட்சிகளிலும் பின்னனி சப்பமாக அல்லாஹ{ அக்பர் என்ற வார்த்தைதான் இடம் பெறுகின்றது.

19.           கொலை தொடர்பான காட்சிகள் அனைத்திலும் திருமறைக் குர்ஆனின் வசனங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது.

20.           முஸ்லிம்களின் கடைகளில் ஆயுதம் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுவதாக காட்சி அமைந்திருக்கின்றது. காய் கரி கடையில் கூட ஆயுதத்தைத் தான் முஸ்லிம்கள் விற்கின்றார்கள் என்பதே காட்சியின் அமைப்பு.
21.           முஸ்லிம்கள் தங்களது தீவிரவாத செயல்களுக்கான வருவாயை ஓபியம் என்ற போதைப் பொருளை விற்றுத் தான் பெற்றுக் கொள்கின்றார்கள். முஸ்லிம்கள் போதைப் பொருள் கடத்துபவர்கள். இதன் மூலம் தான் இவர்களுக்கு பொருளாதாரம் கிடைக்கின்றது என்று காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

22.           இந்தப்படத்தின் மையக்கருவை சொல்லப்போனால்,முஸ்லிம்களும் முஸ்லிம் தேசங்களும் தீவிரவாதத்தின் ஏஜன்டுகள். இவர்கள் பயிற்சி எடுப்பது கூட புஷ் மற்றும் ஏரியல் ஷெரோனின் உருவத்திற்கு குறி வைத்துச் சுட்டுத்தான். இதன் மூலம் தீவிரவாதத்தை உலகிலிருந்து துடைப்பதற்காக  முழு மூச்சாய் உழைக்கும் நாடுகளே அமெரிக்காவும் இஸ்ரேலும். இந்தச் சமாதானத் தூதுவர்களை அழிப்பதற்கு முயலும் தீவிரவாதக் கும்பல்களே முஸ்லிம் தேசத்து மைந்தர்கள். இதற்கு இஸ்லாமும் குர்ஆனும் துணை போகின்றன.இந்தத் தீவிரவாதம் இன்றுபல நாடுகளில் ஊடுறுவி வருகின்றது. அதனை அழிப்பதற்காய் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.இது தான் இந்தப்படம் சொல்லவிழையும் செய்தி.

23.           இதில் வரலாற்றை திரிவு படுத்தியுள்ளதோடு, அமெரிக்க ஆக்ரமிப்பை எதிர்த்து போராடும் நாடுகளை பயங்கரவாதிகளாய் சித்தரித்திருப்பதோடு, அமெரிக்கா புரிந்த அத்தனை அட்டூழியங்களும் கவனமாய் மறைக்கப்பட்டு அகிம்சை வாதிகளாய் மெருகூட்டப்பட்டுள்ளதானது வரலாற்றுத் துரோகமாகும்.இதனை இப்படம் கச்சிதமாய் செய்து முடித்துள்ளது.
எனவே, கூட்டுக்கழித்துப்பார்த்தால் அமெரிக்காவின் பணத்திற்கு அடிமைப்பட்டு கமல்ஹாஸன் நடித்துள்ள நாரிப்போன அமெரிக்காவின் வக்கிரக சிந்தனையின் வெளிப்பாடெ ‘விஸ்வரூபம்’.


வாழ் நாள் தடை செய்க!


இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் புண்புடுத்தும் விதமாக மட்டுமன்றி, தப்பாகவும் சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள விஸ்பரூபம் திரைப்படம் இலங்கையில் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது. பல்லின சமுதாயத்தவர்கள் கூடி வாழும் இலங்கை போன்ற நாட்டில், அதுவும் இன முறண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தத் தருணத்தில் எறியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்று இத்திரைப்படமும் அமைந்துவிடக்கூடாது. இதையும் தாண்டி இத்திரைப்படம்  வெளியிடப்படுமாயின் இந்நாட்டின் சமூக சகவாழ்வு மற்றும் மத நல்லிணக்கம் சீர்குலைவதோடு, உணர்ச்சிவயப்பட்ட செயற்பாடுகள் மூலம் இந்நாட்டின் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு.
இந்நிலையை கருத்திற் கொள்ளாது இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் எதிரொலிக்கும் விளைவுகளுக்கு இந்நாட்டு அரசே பதில் சொல்ல வேண்டி வரும் என்பதையும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.


நன்றி SLTJ 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets