Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

ஷஹீத் ஸையித் குதுப்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 
ஷஹீத் ஸையித் குதுப்
மேற்குலகம் எகிப்து முஸ்லிம்களை இஸ்லாத்தைவிட்டும் தூரப்படுத்திக்கொண்டிருந்த போதுதான் 1906 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி எகிப்தின் அஸ்ஸுயூத் மாகாணத்தில் மூஸே கிராமத்தில் ஸையித் குதுப் அவர்கள் பிறந்தார்கள்.. குதுப் அவர்களுக்கு சிறுவயது முதலே இருந்த இலக்கிய ஆர்வத்தின் விளைவு 1933ல் இலக்கியத் துறையில் பட்டப் படிப்பைப் பூர்த்திசெய்தார்..
அவரின் கல்வியாற்றலை அறிந்துகொண்ட எகிப்திய கல்வியமைச்சு 1948ல் அவரை அமெரிக்காவின் கல்விக்கொள்கையை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கக்கோரி அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது. குதுப் அவர்களது இந்த அமெரிக்கப் பயணம்தான் அவரது பிற்பட்டகால வாழ்க்கையின் திருப்புமுனைக்கு வித்தாயமைந்தது.சையித் குதுப் அவர்கள் அந்நாடுகளின் கீழ்த்தரமான நாகரிகங்கள், கலாசாரங்கள் குறித்தும் இஸ்லாத்தை அழிப்பதற்காக அவர்கள் தீட்டும் சூட்சுமங்கள் பற்றியும் நன்கு அறிந்துகொண்டார்.



அத்தோடு எகிப்தில் ஹஸனுல் பன்னா (ரஹ்) கொலைசெய்யப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற அமெரிக்கர்கள் அதனைப் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடியமை குதுப் அவர்களை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது.

சையித் குதுப் அவர்கள் எகிப்து திரும்பியதும் அடுத்தகட்டமாக இமாம் ஹஸனுல் பன்னா பற்றியும் அவரது இஸ்லாமிய இயக்கமான இஹ்வானுல் முஸ்லிமூன் பற்றியும் தேடியறிந்து 1953ல் தன்னை உத்தியோகபூர்வமாக அவ்வியக்கத்தில் இணைத்துக்கொண்டார்.

இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவராக குதுப் அவர்கள் இருக்காவிடினும் இயக்க ஊழியர்களிலேயே ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களின் பின்னரான சிந்தனைச் சிற்பியாக போற்றப்படுபவர் இவரே. இஸ்லாமிய அழைப்புப் பிரசாரத்தற்கு குதுப் அவர்கள் தமது சிறுபராயம் முதலே இருந்துவந்த இலக்கிய வேட்கையினை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பன்னாவின் சிந்தனைகளையும் தனது சிந்தணைகளையும் இணைத்து அவற்றுக்கு இலக்கிய மெருகூட்டி தனது பேனா முனையினால் முழுவடிவம் கொடுத்தார்.. அவரது இந்தப் பேனாமுனைப் புரட்சியின் ஆரம்பகட்டமே எகிப்தின் சடவாத அரசுக்குப் பெரும் இடியாய் இடித்தது.

இயக்கத்தில் இணைந்த அடுத்த வருடமே (1954ல்) இயக்கத்தின் “இஹ்வானுல் முஸ்லிமூன்” பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பதவியேற்றார். என்றாலும் இவர் பதவியேற்று இரண்டு வாரங்களிலேயே இப்பத்திரிகை தடைசெய்யப்பட்டது. அதே ஆண்டில் (1954 ஜுலை 07) எகிப்து ஜனாதிபதி ஜமால் அப்துல் நாஸருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதுவே ‘ஆங்கிலோ-எகிப்து ஒப்பந்தம்’ எனப்படுகின்றது. இதற்கு இஹ்வான்கள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். எனவே இஹ்வான்களில் பலர் நாஸரின் அரசால் 1954 ல் ஒட்டு மொத்த இஃவான்களையும் கூண்டோடு சிறை பிடிக்கப்பட்டனர். இதில் சையித் குதுபும் ஒருவர்.. சிறைச்சாலைகளில் கொடுமையோடு தேர்ச்சி பெற்ற வேட்டை நாய்களை விட்டு கடிக்க வைப்பார்கள். பல தடவை அவர்களின் தோல் புயங்கள், கால் உடைக்கப்பட்டு உள்ளங்கை கிழிக்கப்பட்டு குற்றுயிராக கிடப்பார்கள். 1955 மே 3ம் திகதி சையித் குதுப் அவர்கள் உடல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு இராணுவ மறுத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்நிலையிலேயே மீண்டும் அவர்மீது 15வருட சிறைத்தண்டனை விதியானது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தூதுவர்களைக் குதுப் அவர்களிடம் அனுப்பி “மன்னிப்புக் கோரிக்கை சமர்பித்தால் விடுதலை செய்வதாகவும் கல்வியமைச்சுப் பதிவியில் அமர்த்துவதாகவும் ஆசைவார்த்தைகளை வீசி வலைவிரித்தது. ஆனால் அதற்கு குதுப் அவர்கள் அளித்த பதில் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் அத்தூதுவர்களிடம் கூறினார் “அநியாயத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள் அநியாயத்தை வாழ்க்கையாகக்கொண்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்பது விந்தையானதொரு விடயம். அல்லஹ்வை முன்னிறுத்திக் கூறுகின்றேன். மன்னிப்பைக் கேட்கும் ஒரே ஒரு வார்த்தைதான் என்னைக் காப்பாற்றிவிடும் என்றாலும் அதனை நான் சொல்லத்தயாராயில்லை. என்னைப் படைத்த என் இரட்சகனின் முன் நான் அவனைச் சந்திக்க விரும்பும் முகத்தோடு அவன் என்னைப் பொருந்திக்கொள்ளும் விதத்திலேயே நான் சமர்பிக்கப்படுவதை விரும்புகின்றேன்” “என்னை இஸ்லாத்தின் எதிரிகள் என்ன செய்து விட முடியும். தனிமை சிறையில் அடைத்தால் அது இறைவனுடான உரையாடல், தூக்கிலிட்டால் அது ஷஹாதத், நாடு கடத்தினால் அது ஹிஜ்ரத்” என்று முழங்கினார்கள்

.அத்துணை கொடுமைகளையும் சகித்து கொண்டு சிறையிலிருந்து அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக “பீ ழிலாலில் குர்ஆன் – அல்குர்ஆனின் நிழலில்”என்ற நூலை எழுதினார். அரபு மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரைகளில் இதற்குத் தனித்துவமான இடமுண்டு.

15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும் 10 வருடங்களிலேயே (1964) அவர் விடுதலைசெய்யப்பட்டார். என்றாலும் எகிப்தின் பாதுகாப்புப் படையின் கடுமையான கண்கானிப்பின் கீழே அவர் நாட்களைக் கழிக்கவேண்டியிருந்தது. இக்கால கட்டத்தில்தான் ஸையித் குதுப் அவர்கள் “மஆலிம் பித் தரீக் – இஸ்லாமிய எழுச்சியின் மைற்கற்கள்” என்ற நூலை எழுதினார். இதுவே அவருக்கு மரணதண்டனை விதிக்கவும் காரணமாயமைந்தது. இந்நூல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நாஸரின் வயிற்றில் புலியைக் கரைத்தது.

மஆலிம் பித்தரீக் நூல் வெளியானதும் அது ஜனாதிபதி அப்துல் நாஸரைக் கொலைசெய்வதற்கான ஒரு சூழ்ச்சியென்றும் இஹ்வான்கள் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டுவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவசரகால சட்டத்தை அமுலாக்கம் செய்து சையித் குதுப் உட்பட சுமார் 24000 இஹ்வான் உறுப்பினர்களைக் கைதுசெய்து சிறையில் தள்ளியது. இது சையித் குதுப் சிறையிலிருந்து விடுதலையாகி மூன்றே மாதங்களில் (1964 மார்ச் 24) நடைபெற்றது. இதன்போது அவர்மீதான சித்தரவதைகள் அதிகரித்தன.

இராணுவ நீதிமன்றம் இரகசியமான முறையில் விசாரணைகளை நடாத்தி ஒரு குருட்டுத் தீர்ப்பை வழங்கியது. அந்தவகையில் 1966 ஒகஸ்ட் 29ல் சையித் குதுப், யூஸுஃப் ஹவ்வாஷ், அப்துல் ஃபத்தாஹ் இஸ்மாயில் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த போது இஸ்மாயில் உரத்த குரலில் நீதிமன்றத்தில் முழங்கினார்கள் “கஃபாவின் ரட்சகன் மீது ஆணையாக நான் வெற்றியடைந்து விட்டேன்”. இவை அனைத்தும் “அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காக தவிர வேறு எதற்காகவும் பழிவாங்கவில்லை.” (இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).

இவரது மரணம் உலக மக்களது உணர்வுகளைக் கொதிப்படையச் செய்தது. எகிப்திய ஆட்சிக்கெதிராக இஹ்வான்களோடு பொதுமக்களும் கண்டனக்கணைகளை எழுப்பினர். இஹ்வானிய இயக்கம் உலகளவில் தடம் பதிக்க அவரது மரணம் அடியாயமைந்தது. “அல்குர்ஆனின் நிழலில், இஸ்லாமிய எழுச்சியின் மைற்கற்கள், ஆத்ம பரவசங்கள், இஸ்லாத்தில் சமூக நீதி, எதிர்காலம் இஸ்லாத்திற்கே”(இவை அரபு நூற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளாகும்) என்று அவர் எழுதிய சுமார் 22 புத்தகங்கள் உலகம் முழுதும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன

நன்றி فاطمة بتول (Fatima Batool) இன் Facebook  பதிவு 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets